ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நிறைவடைந்த உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்குகொண்ட இலங்கை அணி ஏமாற்றத்துடன் நாடு திரும்பியுள்ளது.
19ஆவது உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் 19ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதிவரை ஹங்கேரியில் நடைபெற்றதுடன், 202 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட மெய்வல்லுனர்கள் பங்குகொண்ட இம்முறை போட்டி தொடரில் இலங்கையிலிருந்து 6 வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.
பெண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கை வீராங்கனை தில்ஹானி லேக்கம்கே 55.89 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து 14ஆம் இடத்தைப் பிடித்ததுடன் முதல் சுற்றுடன் வெளியேறினார்.
தகுதிகாண் மட்டத்திற்கான தூரம் 61.50 மீட்டர்களாக நிர்ணயிக்கப்பட்டதுடன், A மற்றும் B ஆகிய இரண்டு பிரிவுகளிலும் அதிசிறந்த ஆற்றல் வெளிப்படுத்திய 12 பேர் மாத்திரம் தான் இறுதிச் சுற்றில் பங்குபற்ற தகுதிபெற்றனர். அதன்படி, A பிரிவில் 14ஆம் இடத்தைப் பெற்ற தில்ஹானி, இரண்டு பிரிவுகளுக்குமான ஒட்டுமொத்த நிலையில் 34 வீராங்கனைகளில் 22ஆம் இடத்தைப் பிடித்தார்.
இதனிடையே, ஆண்களுக்கான 4×100 மீட்டர் 2ஆவது தகுதிகாண் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை அணி, போட்டியை 3 நிமிடங்கள் 03.25 செக்கன்களில் நிறைவு செய்து கடைசி இடத்தைப் பெற்றது. அதேபோல, 17 அணிகளுக்கான ஒட்டுமொத்த நிலையிலும் இலங்கை அணி கடைசி இடத்தைப் பிடித்தது.
இலங்கை அஞ்சலோட்ட அணியில் அருண தர்ஷன, ரஜித்த ராஜகருணா, பபசர நிக்கு, காலிங்க குமாரகே ஆகியோர் இடம்பெற்றனர்.
குறித்த போட்டியில் இலங்கையின் அதிசிறந்த நேரப் பெறுதி 3 நிமிடங்கள் 01.56 செக்கன்களாக இருந்த போதிலும், இலங்கை அணியால் எதிர்பார்த்தளவு திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் போனது.
எவ்வாறாயினும், முதலாவது தகுதிகாண் போட்டியை 2 நிமிடங்கள் 59.05 செக்கன்களில் நிறைவு செய்த இந்திய அஞ்சலோட்ட அணி ஆசிய சாதனையை நிலைநாட்டி இரண்டாம் இடத்தைப் பெற்று இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றது.
இதனிடையே, கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 12 தங்கம், 8 வெள்ளி மற்றும் 9 வெண்கலப் பதக்கங்களை வென்ற ஐக்கிய அமெரிக்கா அணி பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க, முறையே தலா 4 தங்கப் பதக்கங்களை வென்ற கனடா மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் 2ஆவது, 3ஆவது இடங்களைப் பிடித்தன.