2023ஆம் ஆண்டில் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காகக் கோரப்பட்டிருந்த வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அத்துடன் புதிதாக வேட்புமனுக்களைக் கோருவதற்கும் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.
பழைய வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கும், புதிய வேட்பு மனுக்களைக் கோரி தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அண்மையில் சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டது.
அதன்படி, புதிய வேட்புமனுக்களை கோருவதற்குத் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் ஒன்றைத் தயாரிப்பதற்கு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.