NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனம் ஊடாக 10.2 மில்லியன் டொலர்கள் நட்டஈடாக கிடைக்கப்பெற்றுள்ளது – அனுராத ஜயரத்ன

சட்டமா அதிபரின் அனுமதி இல்லாமல் நியூ டயமன் கப்பலை இலங்கையின் கடல் எல்லையில் இருந்து வெளியேற்றிய நபர், எதிர்க்கட்சித் தலைவரின் கரங்களை பலப்படுத்த எதிர்க்கட்சியுடன் ஒன்றிணைந்துள்ளமை கவலைக்குரியது என நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அமர்வின் போது எதிர்க்கட்சித்தலைவர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளாகி மூழ்கிய ஆ.ஏ.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் மற்றும் ஏற்பட்ட இழப்புக்களுக்கு நட்டஈடு பெற்றுக்கொள்வதற்காக சட்டமா அதிபர் ஊடாக சிங்கப்பூர் நாட்டில் சர்வதேச வணிக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர் பதில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இலங்கை சார்பில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 06 ஆம் திகதி பதில் வாக்குமூலம் வழங்குவதாக சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.அதற்கான நடவடிக்கைகளை குறித்த ஆலோசனை நிறுவனமும், சட்டமா அதிபர் திணைக்களமும் முன்னெடுத்துள்ளது.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சிங்கப்பூர் நாட்டில் சர்வதேச வணிக நீதிமன்றில் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை சபைக்கு சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியிருந்தார்.

இந்த விபத்தினால் இலங்கை கடற்பரப்புக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனம் 10.2 மில்லியன் டொலரை முதல் கட்ட நட்டஈடாக வழங்கியுள்ளது. கடற்றொழில் வளங்கள் அமைச்சின் ஊடாக இந்த 10.2 மில்லியன் டொலர் செலவழிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்களை பெற்றுக்கொள்ளலாம்.

நியூ டயமன் கப்பலால் கடல் வளத்துக்கு ஏற்பட்ட பாதிப்பை முறையாக மதிப்பீடு செய்யாமல் கப்பலை வெளியேற்றியதால் நட்டஈட்டை மதிப்பீடு செய்ய முடியவில்லை. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் எதிர்க்கட்சித் தலைவரின் கரங்களை பலப்படுத்த அவர்களுடன் ஒன்றிணைந்துள்ளமை கவலைக்குரியது என இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles