(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள இரண்டு பராமரிப்பு பணிகள் மற்றும் சமனல வாவி மின் உற்பத்தி நிலையத்தின் நீர் பிரச்சினைகள் காரணமாக எதிர்வரும் வாரத்தில் தேசிய மின் அமைப்பிலிருந்து 690 மெகாவாட் மின்சாரம் இழக்கப்படும் என மின் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டில் மூன்றாவது முறையாகவும் இலக்கம் 2 ஜெனரேட்டர் இயந்திரத்தில் நேற்று (08) அதிகாலை இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.
குறித்த இயந்திரத்தின் இரண்டாம் நிலை அமைப்பில் ஏற்பட்ட கசிவு காரணமாக அதனை மீளமைக்க 10 நாட்கள் எடுக்கும் என பொறியாளர்கள் இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளனர்.
தற்போது, அதன் மூன்றாம் எண் ஜெனரேட்டரும் முன் திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிக்காக மூன்று மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த இரண்டு ஜெனரேட்டர்களிலிருந்தும், தலா 270 மெகாவாட், 540 மெகாவாட் தேசிய அமைப்பிற்கு இழந்துள்ளது.
விவசாய நடவடிக்கைகளுக்காக தலா 75 மெகாவாட் திறன் கொண்ட 150 மெகாவாட் திறனை வழங்கும் சமனல வாவி மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 16ஆம் திகதியுடன் நிறுத்திவைக்கப்படும்.
அதன்படி, நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டு பராமரிப்பு பணிகள் மற்றும் சமனல வாவியின் மின் நிலைய நீர் பிரச்சினை காரணமாக அடுத்த வாரத்திற்குள் 690 மெகாவாட் மின்சாரம் தேசிய மின்தொகுப்பிலிருந்து இழக்கப்படும்.
குறிப்பாக இந்த வெப்பமான காலநிலை நாட்களில் தினசரி மின் தேவை 50 ஜிகாவாட் மணிநேரத்தை நெருங்கி வருவதாகவும், மின்சாரம் வழங்குவதில் கடும் நெருக்கடி நிலவுவதாகவும் மின் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.