எரிபொருள் விலை குறைப்புக்கு அமைய நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பஸ் கட்டணங்கள் 4.24 சதவீதத்தால் குறைக்கப்படும் எனவும் இதற்கமைய, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 28 ரூபாவில் இருந்து 27 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும், இரண்டாம் கட்டணம் 35 ரூபாவாகவும் மூன்றாம் பஸ் கட்டணம் 45 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதிக் கூடிய பஸ் கட்டணமாக இருந்த 2,267 ரூபாவை 2,170 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும் முச்சக்கரவண்டி கட்டணத்தை எவ்விதத்திலும் குறைக்க முடியாது என முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
பெற்றோலின் விலை 300 ரூபாவுக்கும் கீழ் குறைக்கப்பட்டால் மாத்திரமே முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க முடியும் என அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் சங்கங்கங்கள் தெரிவித்துள்ளன.
மாதாந்த விலைத் திருத்தத்தின் பிரகாரம் எரிபொருளின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டன.
அதற்கமைய, 332 ரூபாவாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 21 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 311 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
மேலும், 307 ரூபாவாக காணப்பட்ட ஒட்டோ டீசலின் விலை 24 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 283 ரூபாவாகவும் 352 ரூபாவாக இருந்த சுப்பர் டீசலின் விலை 33 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 319 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பெற்றோல் இலவசமாக வழங்கப்பட்டாலும் கட்டணத்தை குறைக்கும் பொறிமுறை இல்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.