இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்றைய தினம் அமுல்படுத்தப்பட்ட மின்வெட்டுக்கு மாத்திரமே மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை 2 நாள் மின்வெட்டுக்கான அட்டவணையை வெளியிட்டிருந்தாலும், இன்றைய நாளுக்கான எந்த மின்வெட்டுக்கும் ஒப்புதல் கோரவில்லை எனத் தெரிவித்துள்ளது.
அதன்படி அந்தக் கோரிக்கைக்காகக் காத்திருப்பதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயலிழப்பு காரணமாக மின்சாரத் தேவையை நிர்வகிக்க இந்த மின்வெட்டுகளுக்கு மின்சார சபை ஒப்புதல் கோரியுள்ளது.
எனினும், மின்சார சபையால் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், திட்டமிடப்பட்ட மின்வெட்டுகளின் பகுதிகள் மற்றும் கால அளவுகளில் முரண்பாடுகள் இருப்பதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை 4 நாட்களில் தேசிய மின் கட்டமைப்புடன் சேர்க்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, பெப்ரவரி 14ஆம் திகதியளவில் தேசிய மின் கட்டமைப்புடன் சேர்க்க எதிர்பார்ப்பதாக மின்சார சபையின் பொறியாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார்.