பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் இன்று (26) பிரம்மாண்டமான தொடக்க விழாக்களுடன் ஆரம்பமாகவுள்ளது.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் 04 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி 33ஆவது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று (26) ஆரம்பமாகி ஓகஸ்ட் 11ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.
இதில் 206 நாடுகளை சேர்ந்த 5,250 வீரகளும் 5250 வீராங்கனைகளுமென மொத்தம் 10,500 பேர் கலந்து கொள்கின்றனர். இவர்கள் ஒலிம்பிக் நகரத்துக்கு வருகைத் தந்தவண்ணமுள்ளதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தம் 32 விளையாட்டுகளில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இவ்வாண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க இலங்கை வீர – வீராங்கனைகள் ஆறுபேர் தகுதி பெற்றுள்ளநிலையில் அவர்கள் பாரிஸ் நகருக்கு சென்றுள்ளனர்.
அந்தவகையில் இன்று (26) செய்ன் நதிக்கரையில் சுமார் 03 இலட்சம் பேர் முன்னிலையில் பிரம்மாண்ட தொடக்க விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வழக்கமான மைதானத்தில் தொடக்க விழா நடைபெறும் நிலையில் இந்த முறை வித்தியாசமாக ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதன்முறையாக தண்ணீரில் தொடக்க விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற ஈபிள் டவர் அருகிலுள்ள செய்ன் நதிக்கரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. வீரர்கள், கலைஞர்கள் 162 படகுகள் மூலம் செய்ன் நதியில் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
படகுகள் மூலம் வீரர்கள் சுமார் 06 கிலா மீற்றர் தூரப்பாதையில் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
இதில் அந்தந்த நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தங்கள் நாட்டு தேசிய கொடியையேந்தி அணிவகுப்பு நடத்தவுள்ளனர்.
கண்கவர் கலைநிகழ்ச்சிகள், லேசர் ஒளி விளக்கு, பாரம்பரிய நடனங்கள் என 4 மணி நேரம் தொடக்க விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நதிக்கரையில் 63 பிரமாண்ட எல்ஈடி திரைகளில் தொடக்க விழா ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
100 ஆண்டுகளுக்கு பின்னர் ஒலிம்பிக் தொடரை பிரான்ஸ் நடத்துவதால் உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விழாவையொட்டி பாரிஸ் நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதன்முறையாக அறிமுகமாகும் பிரேக் டான்ஸிங்
கடந்த 2020ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்ட பேஸ்போல், சொஃப்ட்போல், கராத்தே ஆகிய விளையாட்டு போட்டிகள் இந்த ஆண்டில் இடம் பெறவில்லை. இந்த ஆண்டின் முதன்முறையாக பிரேக்கிங் (பிரேக் டான்ஸிங்) விளையாட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் அனைத்தும் பாரிஸை சுற்றிலும் நடைபெறவுள்ளது. ஸ்டேட் டி பிரான்ஸ், ரோலண்ட் கரோஸ் ஸ்டேடியம் மற்றும் சாம்ப்ஸ் எலிசீஸ் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
1924ஆம் ஆண்டு பிரான்ஸில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. 100 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒலிம்பிக் திருவிழாவை பிரான்ஸ் நடத்துகிறது.
லண்டனுக்கு பின்னர் 3ஆவது முறையாக ஒலிம்பிக் தொடரை நடத்தும் நாடு என்ற பெருமையையும் பாரிஸ் வசப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.