உலகளாவிய ரீதியில் எதிர்வரும் ஜூன் மாதம் முழுவதும் இடம்பெறவுள்ள ஓரினச்சேர்க்கையாளர்களின் (LGBTQ) கொண்டாட்டங்களை இலக்காகக் கொண்டு தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் எச்சரிக்கை அறிவிப்பையும் வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த கொண்டாட்டங்களின் போது சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்கள் குறித்தும் கவனமாக இருக்குமாறு அமெரிக்கா எச்சரித்துள்ளது.
எனினும் குறித்த எச்சரிக்கை அறிவிப்புகளில் இடங்கள் குறிப்பிடப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க புலனாய்வு அமைப்புகளிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இதற்கு முன்னரும் ஜூன் மாதத்தில் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் புளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியிருந்தது.
குறித்த துப்பாக்கிச்சூட்டை ISIS நடத்தியது என அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது.
இந்த தாக்குதலில் 49 பேர் உயிரிழந்ததாகவும், 53 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, 2023ஆம் ஆண்டு, அவுஸ்திரேலியாவின் வியன்னாவில் ஓரினசேர்க்கையாளர்களின் பேரணியில் தாக்குதல் நடத்த முயன்ற மூவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த தாக்குதல் நடத்தியவர்கள் ISIS பயங்கரவாதிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
மேலும், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிராக 145 வன்முறை மற்றும் துன்புறுத்தல் சம்பவங்கள் சமீபத்தில் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.