பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெஹ்ரீக் – இ- இன்சாஃப் கட்சி தலைவருமான இம்ரான்கான் கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கிலிருந்து இம்ரான்கானை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
இம்ரான்கானை கைது செய்ததன் காரணமாக அவரது ஆதரவாளர்கள் மே மாதம் 9ஆம் திகதியன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ராவல்பிண்டியிலுள்ள இராணுவ தலைமையகம், அருங்காட்சியகம் என பல கட்டிடங்கள் சேதமாகின.
இந்த கலவரத்தில் ஈடுபட்ட பலரை பொலிஸார் கைது செய்தனர்.
குறித்த கலவரத்தை தூண்டியதாக கூறி இம்ரான் கான் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கலவர வழக்கில் இம்ரான்கான் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு சரியான ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்துள்ளது.
இவர் இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டாலும் ஊழல் வழக்கில் கைதாகிய அவர் அடியாலா சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.