களஞ்சியசாலைகளில் இருப்பில் உள்ள நெல் தொகை தொடர்பில் இன்றும் நாளையும் விசேட ஆய்வு நடத்தப்படும் என விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம்.விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபை ஆகியன இணைந்து இந்த ஆய்வை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சந்தையில் தொடர்ந்தும் கட்டுப்பாட்டு விலையில் அரிசி கிடைப்பதில்லை என நுகர்வோர் விசனம் வெளியிடுகின்றனர் எனவும்
ஜனாதிபதிக்கும் அரிசி வர்த்தகர்களுக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கட்டுப்பாட்டு விலையில் அரிசியை வழங்குவதற்கு வர்த்தகர்கள் இணங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அரிசியின் விலை தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நேற்றைய தினம் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதில் விவசாய, வர்த்தக அமைச்சு மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபை என்பவற்றின் அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.
இதேவேளை, இந்த சந்திப்பில் சிறியளவில் அரிசி விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களும் பங்கேற்றிருந்தனர். இதன்போது கருத்துரைத்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசியை விற்பனை செய்வதற்கு இடமளிக்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.