அனுமதியின்றி தலவாக்கலை – கிரேட்வெஸ்டர்ன் மலை உச்சியில் முகாமிட இடமளிக்க வேண்டாம் என நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட, வன பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இனங்காணப்படாத பெண்ணின் சடலம் ஒன்று கல்கந்தை மலை உச்சி சரிவு பகுதியில் காணப்பட்டமை தொடர்பில் லிந்துலை மற்றும் தலவாக்கலை பொலிஸாருக்கு 1 ஆம் திகதி மாலை தகவல் கிடைத்துள்ளது . இதனையடுத்து குறித்த சடலம் இராணுவத்தின் உதவியுடன் 2ஆம் திகதி மாலை மீட்க்கப்பட்டுள்ளதையடுத்து நுவரெலியா மாவட்ட செயலாளர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்புமாறு நுவரெலியா பதில் நீதவான் ஜே. அம்பகஹவத்த லிந்துல பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் அத்துடன் இந்த சம்பவத்தில் சடலமாக மீட்க்கப்பட்ட பெண் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுத்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது
குறித்த பெண், ஒருவர் அல்லது சில தரப்பினருடன் மலை உச்சியை அடைந்துள்ளதாகவும், சில காரணங்களால் அவர் உயிர் இழந்ததையடுத்து அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, கிரேட்வெஸ்டர்ன் மலை உச்சியில் இருந்து இந்த பெண்ணின் சடலத்தை எடுத்துவரச் சென்ற இராணுவ வீரர் ஒருவரும் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.