நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 3,737 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 977 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
அதேவேளை, 17 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்ட பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியூடான போக்குவரத்து நேற்று முதல் வழமைக்குத் திரும்பியுள்ளது.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 7 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெறப்பட்ட புள்ளிவிபர தகவலின்படி, மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேரும், குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், சேருவில பிரதேச செயலகப் பிரிவில் 35 குடும்பங்களைச் சேர்ந்த 127 பேரும், கோமரங்கடவல பிரதேச செயலகப் பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரும், மொறவௌ பிரதேச செயலகப் பிரிவில் 54 குடும்பங்களைச் சேர்ந்த 216 பேரும், தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் 93 குடும்பங்களைச் சேர்ந்த 260 பேரும், கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 6 பேரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ் தெரிவித்துள்ளார்.