குற்றப்புலனாய்வு திணைக்களத்தில், பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தக மற்றும் குடு சலிந்து ஆகியோரை காப்பாற்ற முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பான தகவல்கள் வெளியானதை அடுத்து குறித்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக முன்னர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையை சேர்ந்த சிலரே ஈடுபடுத்தப்பட்டிருந்தாக தெரிவித்துள்ளார்.
எனவே, தாக்குதல் திட்டம் ஒன்றை தயாரித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேற தயாராகவுள்ளதாக தகவல் வெளியான ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுக்களை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் நேற்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தங்களது உயிருக்கு உத்தரவாதம் வழங்குமாறு கோரி குறித்த இருவரும் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகர்களான ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோரை காப்பாற்றுவதற்கான திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் நீதிமன்றத்திடம் அறியப்படுத்தப்பட்டது.
அவர்களை காப்பாற்றுவதற்காக கொமாண்டோ பாணியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திடம் அறியப்படுத்தப்பட்டுள்ளது.
கொமாண்டோ படையணியைச் சேர்ந்த முன்னாள் இரண்டு உறுப்பினர்கள் கைதானதை அடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.