கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஆறாவது நாளாக நேற்றையதினம் (25) இடம்பெற்று நேற்றைய அகழ்வு பணியானது நிறைவடைந்திருந்தது.
ஆறாவது நாளாக தொடர்ந்த கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வு நேற்றையதினம் நிறைவடையும் போது ஐந்து மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினத்துடன் 35 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் துப்பாக்கி சன்னங்களும் குண்டு சிதறல்களும் மீட்கப்பட்டுள்ளதோடு கையில் அணியப்படும் இலக்கத்தகடு ஒன்றும் , மணிக்கூட்டு ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்கேனர் இயந்திரம் மூலம் குறித்த புதைகுழியானது எவ்வளவு தூரம் பரந்து வியாபித்துள்ளது என கடந்த இரண்டு தினங்கள் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. இதன் முடிவுகள் நேற்றையதினம் அகழ்வு பரிசோதனை பணி நிறைவுற்றதன் பிற்பாடே கிடைக்கப்பெறும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் அதன் தெளிவான முடிவுகளை நாளையதினமே (27.11.2023) பெற முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த புதைகுழியானது வீதியின் ஊடாகவும் ஏனைய பகுதிகள் ஊடாகவும் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ கடந்த தினங்களில் ஊடகங்களுக்கு கருத்து கருத்து தெரிவித்தார்.
இன்றையதினம் (26) அகழ்வு பணி இடம்பெறாது விடுமுறை வழங்கப்பட்டு நாளையதினம் ஏழாவது நாளாக அகழ்வு பணி இடம்பெற உள்ளது.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த செப்ரெம்பர் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்ரெம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தது. இவ் அகழ்வு பணியில் 17 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையிலும், துப்பாக்கி சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களும் மீட்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அகழ்வு பணியானது இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் (20) அன்று மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.