NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைக்குழி – மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று ஆரம்பம்!

முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று (04) ஆரம்பிக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு கடந்த மே மாதம் (16) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு ஜீலை மாதம் 04 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கமைய மூன்றாம் கட்ட அகழ்வுபணிகள் இன்று இடம்பெறவுள்ளன.

கடந்த வருடம் ஜூன்மாதம் 29ஆம் திகதியன்று, முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினைப் பொருத்துவதற்காக, கனரக இயந்திரத்தின் மூலம் நிலத்தினை அகழ்ந்தபோது மனிதப் புதைகுழியொன்று இனங்காணப்பட்டது.

இதன்பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் பங்குபற்றுதல்களுடன், தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழியில் இரண்டு கட்டங்களாக அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு இருகட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளின்படி இதுவரையில் குறித்த மனிதப்புதைகுழியிலிருந்து 40 மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும், தமீழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு போராளிகள் பயன்படுத்தும் இலக்கத்தகடுகள், துப்பாக்கிச் சன்னங்கள், உடைகள் உள்ளிட்ட பல தடயப் பொருட்களும் மீட்கப்பட்டன.

அத்தோடு இரண்டாங்கட்ட அகழ்வாய்வு பணிகளின்போது குறித்த மனிதப் புதைகுழி வளாகம் விசேட ஸ்கேன் கருவிமூலம் ஆய்வு செய்யப்பட்டது.

குறித்த ஸ்கேன் கருவி ஆய்வின்மூலம் முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதானவீதியின் கீழ்ப்பகுதியிலும் மேலும் பல மனித எச்சங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்விற்கென ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் முடிவுற்றதால் அகழ்வாய்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகளுக்கான நிதிஒதுக்கீடுகள் மீளவும் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் மீண்டும் CCTV கமரா, பொலிஸாரின் கண்காணிப்புக்கு மத்தியில் இன்று அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles