(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கோதுமை மாவை இறக்குமதி செய்வதில் இரட்டை நிலைப்பாடு நிலவுவதுடன், விரைவில் கோதுமை மா இறக்குமதிக்கான அனுமதியை வழங்குவது குறித்து நிதி அமைச்சு கலந்துரையாடி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் கோதுமை மாவின் விலை, அரிசி விலை மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்து நிதி அமைச்சு ஆய்வுகளை செய்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பில் நிதி அமைச்சு இன்னும் இறுதித் தீர்மானத்தை எட்டவில்லை. என்றாலும், தற்காலிக நடவடிக்கையாகவே இறக்குமதித் தடை விதிக்கப்பட்டுள்ளன.
கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை கோரியும் இதுவரை அதற்கான உத்தரவுகள் வழங்கப்படாதுள்ளதால் எதிர்காலத்தில் கோதுமை மா தட்டுப்பாடு அல்லது விலை அதிகரிப்பு ஏற்படலாம் என கோதுமை மா இறக்குமதியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கோதுமை மா இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்த தடையைத் தொடர்ந்து இரண்டு பெரிய உள்ளூர் கோதுமை மா விநியோகஸ்தர்களும் பில்லியன் கணக்கான இலாபத்தை ஈட்டியுள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த இரண்டு பெரிய நிறுவனங்களும் கூடுதல் இலாபம் ஈட்டுவதைத் தவிர்க்கவும், நுகர்வோரைப் பாதுகாக்கவும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விற்பனை விலையை ரூ.198 ஆக அறிவிக்குமாறு பொது நிதிக் குழு, சமீபத்தில் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.
இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் இரண்டு நிறுவனங்களும் மாவின் விலையை குறைக்குமாறு கோரிக்கை விடுத்த போதிலும் அதனை குறைக்க மறுத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போர் காரணமாக உலக சந்தையில் கோதுமை மாவின் விலை அதிகரித்து வருதுடன், இலங்கையிலும் இதனால் தொடர்ச்சியாக கோதுமை மாவின் விலைகள் அதிகரித்து வருகின்றன. இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக கோதுமை மா இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.