யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையைச் சேர்ந்த நபர் ஒருவர் விமானத்தில் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ஐப்ப பக்தரான 49 வயதுடைய குறித்த நபர், சபரிமலைக்கு செல்வதற்காக கொழும்பிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டுள்ளார்.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், விமானத்தில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவரது உடல்நிலை மோசமானதால் இதுபற்றி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு அவசர கால மருத்துவ உதவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விமானம் சென்னையில் தரையிறங்கியதும் தயாராக இருந்த மருத்துவ குழுவினர் விமானத்தில் அவரை பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த விமான நிலைய பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை – குரோம்பேட்டை அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது உடலை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவர இலங்கை தூதரக அதிகாரிகள் மூலம் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.