சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்டவீரரான அலெக்ஸ் ஹேல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
கடைசியாக 2022ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண T20 தொடரில் ஆடிய அலெக்ஸ் ஹேல்ஸ் அதன் பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடாது போயினும், உலகின் பல்வேறு T20 லீக் தொடர்களில் தொடர்ந்து ஆடிவந்திருந்தார்.
அலெக்ஸ் ஹேல்ஸ் தொடர்ச்சியாக வெவ்வேறு நாடுகளின் T20 லீக்குகளில் விளையாடிய காரணத்தினால் அவருக்கு தனது தாயக அணியினையும் பிரதிநிதித்துவம் செய்ய முடியாத ஒரு நிலை காணப்பட்டிருந்தது.
எனினும் தற்போது ஓய்வினை அறிவித்துள்ள அவர் தொடர்ச்சியாக T20 லீக்குகளில் ஆட முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேநேரம் ஹேல்ஸின் ஓய்வு அறிவிப்பினால் கடந்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தை அவரின் ஆளுகையில் வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி, அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இடம்பெறும் T20 உலகக் கிண்ணத்தில் புதிய ஆரம்ப வீரர் ஒருவருடன் ஆடவேண்டிய நிலை காணப்படுகின்றது.
இதுவரை 75,T20I போட்டிகளில் ஆடியிருக்கும் அலெக்ஸ் ஹேல்ஸ் 12 அரைச்சதங்கள் மற்றும் ஒரு சதம் அடங்கலாக 2074 ஓட்டங்கள் குவித்திருக்கின்றார். இதேநேரம் இதற்கு முன்னர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் ஓய்வினை அறிவித்திருந்த அலெக்ஸ் ஹேல்ஸ் 70 ஒருநாள் போட்டிகளில் ஆடி 14 அரைச்சதங்கள், 6 சதங்கள் அடங்கலாக 2419 ஓட்டங்கள் எடுத்திருந்ததோடு, 11 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 573 ஓட்டங்கள் எடுத்திருக்கின்றார்.