அரசாங்கத்தின் தற்போதைய வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையின் மூன்றாவது கொடுப்பனவை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபை எதிர்வரும் 12 ஆம் திகதி அனுமதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், இலங்கை அதன் பொருளாதார மீட்சிக்கு அடித்தளமாக இருக்கும் நிர்வாக மேம்பாடுகளில் இன்னும் பின்தங்கியே உள்ளதாக வெரிட்டே ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதன்படி, 2023 டிசம்பரில் புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு மே மாத இறுதிக்குள் 25 வீதக் கடப்பாடுகளை நிறைவேற்ற இலங்கை தவறியுள்ளதுடன்,
நிறைவேற்ற வேண்டிய 63 பொறுப்புகளில் 32 பொறுப்புக்கள் நிறைவேற்றியுள்ளதுடன், 16 பொறுப்புகளை நிறைவேற்றவில்லை எனவும் 15 பொறுப்புக்கள் குறித்து தகவல்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறைவேற்றப்படாத 16 உறுதிமொழிகளை ஆராயும்போது அவற்றில் 7 நிபந்தனைகள் நிதி மேலாண்மையுடன் சம்பந்தப்பட்டவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 6 நிபந்தனைகள் நிதி வெளிப்படைத்தன்மை விடயத்திலும், 3 நிபந்தனைகள் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுடனும் தொடர்புடையவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.