இந்தியாவில் சாரதிகள் இல்லாமல் பொருட்கள் சேவையில் ஈடுபடும் புகையிரதம் ஒன்று சுமார் 84 கிலோ மீட்டர் தூரம் பயணித்து பீதியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் இருந்து பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு குறித்த புகையிரதம் ஞாயிற்றுக்கிழமை சாரதிகள் இல்லாது மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஞாயிற்றுக்கிழமை காலை 7.25 மணி முதல் 9 மணி வரை நடந்த இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக இந்திய ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
53 வேகன் புகையிரதம் , கருங்கற்களை ஏற்றிக்கொண்டு, ஜம்முவில் இருந்து பஞ்சாப் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, பணியாளர்களை மாற்றுவதற்காக கதுவாவில் நின்றது.
ஹேண்ட் பிரேக் போடாமல் சாரதியும் அவரது உதவியாளரும் கீழே இறங்கியுள்ளனர். அதன் பின்னர் தண்டவாளத்தில் ஒரு சரிவில் புகையிரதம் நகரத் தொடங்கியது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
பின்னர், புகையிரதம் மணிக்கு சுமார் 100 கிலோ மீற்றர் வேகத்தில் நகர்ந்து 5 புகையிரதம் நிலையங்களை கடந்து சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, ஜம்மு-ஜலந்தர் வழித்தடத்தில் புகையிரத அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இது குறித்து எச்சரிக்கை அறிவிப்பினை விடுத்ததால், ஆபத்துக்கள், உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் எதுவும் ஏற்படாது தடுக்கப்பட்டது.
80 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தை கடந்த பிறகு, செங்குத்தான சாய்வு காரணமாக உஞ்சி பஸ்ஸி அருகே புகையிரதம் நின்றது.
தண்டவாளத்தில் மணல் மூட்டைகள் மற்றும் மரக்கட்டைகள் போன்றவற்றின் மூலம் தடை ஏற்படுத்தப்பட்டதால் புகையிரதத்தின் மேலதிக பயணம் தடுத்து நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறெனினும், இந்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைக்கு இந்திய புகையிரத திணைக்களம் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேநேரம், சாரதி இல்லாது குறித்த புகையிரதம் மணிக்கு சுமார் 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் கட்சியும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.