இந்தியாவின் கேரள மகளிர் ஆணையம் திருவனந்தபுரம், மலப்புரம், கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் 13 முதல் 19 வயதுடைய இளைஞர்களிடம் தொலைக்காட்சி சின்னத்திரைத் தொடர்பாக ஆய்வு நடத்திய ஆய்வில் சின்னத்திரை தொடர்கள் தவறான செய்திகளை தெரிவிப்பதாக 43 சதவீதமானோர் கூறியுள்ளனர்.
ஏனைய 57 சதவீதமானோர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் கருப்பொருள் மற்றும் உள்ளடக்கத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் மூலம் குழந்தைகள் ஒழுக்கமற்ற அல்லது எதிர்மறை கதாபாத்திரங்களை பின்பற்றுவதும் தெரியவந்துள்ளது.
ஆகவே மலையாள தொலைக்காட்சி தொடர்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளதுடன், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் மெகா சின்னத்திரை தொடர்களை தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
அதன்படி, தொலைக்காட்சிகளில் தினசரி ஒளிபரப்பாகும் நீண்ட கால மெகா தொடர்களை நிறுத்த வேண்டும் எனவும் ஒரு தொடரின் பகுதிகள் எண்ணிக்கை 20 முதல் 30 வரை இருக்குமாறு குறைக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.
அத்தோடு, ஒரு தொலைக்காட்சி நாளொன்றுக்கு 2 தொடர்களை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என கட்டுப்பாடு விதிக்க வேண்டும் எனவும் சின்னத்திரைத் தொடர்களை மறு ஒளிபரப்பு செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.
மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தவறான வார்த்தைகளை தடை செய்ய வேண்டும் எனவும் பெண்கள் இழிவாக சித்தரிப்பதற்கு எதிரான சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்பதுடன், ஆபாசமான உள்ளடக்கம் பரவுவதை தடுக்க கடுமையான விதி முறைகளை அமல்படுத்த வேண்டும் எனவும் கேரள மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.