இலங்கை முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளிடையே கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக சிறைச்சாலைகளில் கடும் இடநெருக்கடி மற்றும் வசதிக்குறைபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, தற்போது சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் தொகை 232 வீதமாக அதிகரித்துள்ளது என சிறைகளில் சன நெரிசலை நிர்வகிப்பதற்கான செயல்திறன் கணக்காய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 53 வீதமான கைதிகள் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை பெற்றவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், குறித்த சிறைக்கைதிகளை நிர்வகிப்பதற்காக அரசாங்கம் ஆண்டுதோறும் 800 கோடி ரூபாவிற்கு அதிகளவான தொகையை செலவிடுவதாக கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, நாடளாவிய ரீதியில் உள்ள 27 சிறைச்சாலைகளில் 187 கழிவறைகள் பற்றாக்குறை இருப்பதாகவும், தற்போதுள்ள 287 கழிவறைகள் புனரமைக்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த காலங்களில் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சேதமடைந்த கட்டடங்கள் இதுவரை புனரமைக்கப்படாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, கைதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாது 1,795 கைதிகள் தொடர்ந்தும் சிறைதண்டனை அனுபவித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலைகளில் நிலவும் இந்த நிலைமையானது, கைதிகளிடையே தொற்றுநோய் பரவும் அபாயத்தை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.