NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிவனொளிபாதமலைக்குச் செல்ல கட்டணம் அறவீடு!

ஹட்டன் மற்றும் இரத்தினபுரி வீதியினூடாக சிவனொளிபாதமலைக்கு சுற்றுலாச்செல்லும் தேசிய, சர்வதேச பயணிகளிடம் நேற்று முன்தினம் (04) முதல் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பிரயாணச் சீட்டு விநியோகிக்கப்படுவதாகவும் பிரயாணச் சீட்டு விநியோகிப்பது அநீதியான செயற்பாடு என்றும் சிவனொளிபாதமலை பொறுப்பாளரும் சப்ரகமுவ மாகாணத்தின் பிரதான சங்கநாயக்கருமான பெங்கமுவே தம்மதின்ன தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்று (05) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு சுட்டிக் காட்டியுள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அரசர் காலத்திலிருந்து பருவகாலம் மற்றும் சாதாரண நாட்களில் சிவனொளிபாதமலைக்கு வரும் எந்தவொரு பக்தர்களிடமும் கட்டணம் அறவிடப்படவில்லை. இந்நிலையில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் சிவனொளிபாதமலைக்கு வழிபாடுகளுக்காக அல்லது சுற்றுலா நிமித்தம் வருகைதரும் தேசிய, சர்வதேச பயணிகளிடம் தற்போது நிதி அறவிட்டு பயணச் சீட்டு விநியோகிப்பது அசாதாரண செயற்பாடாகும்.

பூட்டானிலிருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகள் சிலர் தனது அனுமதியுடன் நேற்று (05) காலை சிவனொளிபாதமலைக்கு சென்றனர். அவர்களிடம் நல்லதண்ணி சிவனொளிபாதமலை பிரதான வீதியிலுள்ள வனஜீவராசிகள் பாதுகாப்பு அலுவலகத்தில் தலா 5 டொலர் நிதி அறவிடப்பட்டு அதற்கான பயணச்சீட்டும் வழங்கப்பட்டுள்ளதாக அறிகிறேன்.

சிவனொளிபாதமலை இரத்தினபுரி மற்றும் ஹட்டன் வீதியில் பியகெட்டபொல உள்ளிட்ட பக்தர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதியை அபிவிருத்தி செய்வதற்கு தான் நடவடிக்கை எடுத்திருந்தேன். ஆனால், வனஜீவராசிகள் திணைக்களத்தினால் அதற்கு எந்தவொரு உதவியும் பெற்றுக்கொடுக்கப்பட வில்லை. பருவகாலத்தில் வரும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் சிவனொளிபாதமலைக்கு பிரவேசிக்கக் கட்டணம் அறவிடப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, பருவகாலத்தில் சிவனொளிபாதமலைக்கு சுற்றுலாவுக்காக வருகை தரும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பிரயாண சீட்டு விநியோகிப்பதற்கு கடந்த 2022ஆம் ஆண்டு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப் பட்டதாக நல்லதண்ணி வனஜீவராசிகள் பாதுகாப்பு அலுவலகத்தின் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, நேற்று முன்தினம் (04) காலை முதல் நல்லதண்ணி வீதியினூடாக பயணிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் 5 டொலரை கட்டணமாகவும் சார்க் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளிலிருந்து வரும் பயணிகளிடமிருந்து 4 டொலரையும் அறவீட்டு பிரயாண சீட்டை விநியோகிக்குமாறு தமக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் ஆலோசனை வழங்கியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய சுற்றுலாப் பயணிகளிடம் 40 ரூபா கட்டணத்தை அறிவிட்டு அவர்களுக்கு பிரயாண சீட்டை விநியோகிக்குமாறும் இந்த பிரயாண சீட்டு விநியோகிக்கும் நடவடிக்கைகளை பருவ காலத்தில் மாத்திரம் முன்னெடுக்குமாறும் தமக்கு மேலும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அவ்வதிகாரி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles