தாய்லாந்தில் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக அதன் அண்டை நாடான சீனாவில் இருந்து தாய்லாந்துக்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி சீனாவில் இருந்து மட்டும் 1 கோடிக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர்.
ஆனால் கொரோனா தொற்றுக்கு பின்னர் இந்த எண்ணிக்கை பல மடங்கு குறைந்தது. தற்போது இயல்பு நிலை திரும்பியதால் படிப்படியாக இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எனினும் கடுமையான விசா கட்டுப்பாடுகளால் கடந்த 6 மாதங்களில் இதுவரை 14 இலட்சம் சுற்றுலா பயணிகள் மட்டுமே சீனாவில் இருந்து வந்துள்ளனர்.
எனவே சுற்றுலாத்துறையை மீட்டெடுக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதன்படி வருகின்ற 25 ஆம் திகதி முதல் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி வரை சீனாவில் இருந்து சுற்றுலா வருபவர்களுக்கு விசா பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் தெரிவித்துள்ளார்.
மேலும் கஜகஸ்தான் நாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என தாய்லாந்து சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.