NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சுதந்திர இலங்கைக்கு இன்றுடன் 76 வயது!

இந்து சமுத்திரத்தின் முத்தென செல்லமாய் அழைக்கப்படும் இலங்கை, ஆங்கிலேயரின் அடிமை நிலையினைத் தகர்த்தெறிந்து சுதந்திரம் என்ற ஒளியை அடைந்து இன்றுடன் 76 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

ஈவு இரக்கமின்றி உயிர்களை கொன்று குவித்த உலகப்போரின் போதும் பிரித்தானியரின் ஆட்சியின் கீழிருந்த இலங்கையை சுதந்திரம் எனும் வெளிச்சத்திற்கு வழிகாட்டிச் சென்ற வீரர்களின் வரலாற்றை நினைவு கூற வேண்டிய நாள் இதுவாகும்.

கி.பி 1505 ஆம் ஆண்டில் இலங்கையின் கரையோர பிரதேசங்களை போர்த்துக்கேயரிடம இழந்தது இலங்கை. அதனைத் தொடர்ந்து சுமார் 100 வருடங்களுக்கு பின்னர் அதாவது கி.பி 1602 ஆம் ஆண்டு ஒல்லாந்தரின் ஏகாதிபத்தியத்துக்குள் சிறைபிடிக்கப்பட்டது.

நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டு, அனைத்து வகை வளங்களும் கொண்டு ஒரு பொக்கிஷமாக விளங்கும் இலங்கை போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தரின் ஆட்சியில் செழிப்பு மிக்க நாடாக திகழந்தது.

இலங்கையில் கோப்பி, கருவா, ஏலம், கிராம்பு மற்றும் மிளகு உள்ளிட்ட வாசனைத் திரவியங்களை சூறையாடி, தங்களுடைய நாட்டுக்குக் கொண்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடனே ஆங்கிலேயர்கள் இலங்கையை அதாவது அப்போதைய சிலோனை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தது.

இயற்கை அழகுடன், வளமிக்க நாடாக இருப்பதால் இலங்கையை தங்களுடைய கட்டுப்பாட்டுகள் வைத்திருந்தால் உலக பொருளாதார சந்தையில் கொடிக்கட்டி பறக்க முடியும் என்பதே ஆங்கிலேயர்களின் எண்ணமாக இருந்தது.

இந்த எண்ணத்தோடு, கி.பி 1766 ஆம் ஆண்டளவில் இலங்கையின் கரையோர பிரதேசங்களை பிரித்தானியா கைப்பற்றியது.

முதலில் கரையோரங்களில் தங்களுடைய அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்ட, ஆங்கிலேயர் முழு இலங்கைகையும் தங்களுடைய ஆட்சிக்குள் கொண்டுவரும் முயற்சியை முன்னெடுத்தனர்.

மலையகத்தின் அமைவிடமும் தலதா மாளிகையில் இருந்த புனித சின்னங்களும் ஆங்கிலேயரின் எண்ணத்துக்கு தடையாக இருந்தது.

நாட்டின் ஆட்சியை கைப்பற்றுவதற்கு தலதா மாளிகையில் இருக்கும் புனித சின்னங்களை கைப்பற்ற வேண்டும் என்பது அப்போதைய விதியாக இருந்தது.

இதுவே, மலையகப் பிரதேசத்தை முதலில் ஆங்கிலேயர் தமது நிர்வாகத்திற்குள் கொண்டுவர முக்கிய காரணமாக இருந்தது.

எனினும், ஆங்கிலேயரால் அவ்வளவு இலகுவில் புனித சின்னங்களை கைப்பற்ற முடியாதமையால், கண்டி மன்னனுக்கெதிராக இயங்கிய சில தேசிய வீரர்கள், கண்டிய மன்னனை வீழ்த்த, பிரித்தானியரோடு ஒப்பத்தம் செய்து கண்டியை பிரித்தானியரிடம் தாரை வார்த்து கொடுத்தனர்.

இதனால், 1815 ஆம் ஆண்டு மலையக பிரதேசங்களை ஆங்கிலேயர்கள் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதனைத் தொடர்ந்து போர்த்துக்கேயராலும் ஒல்லாந்தராலும் முழுமையாகக் கைப்பற்ற முடியாது போன இலங்கையின் முழுத்தீவையும் பிரித்தானியர் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

இங்கிருந்தே நாட்டை மீட்டெடுக்கும் இலங்கையர்களின் சுதந்திரப் போராட்டமும் ஆரம்பமானது.

எத்தனையோ ஆயத போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் இலங்கையர்களால் அதில் வெற்றிப்பெற முடியாதமையால், ஆயத போராட்டத்தை விட அரசியல் ரீதியான போராட்டத்தை முன்னெடுத்து சுதந்திரம் பெற முயன்றனர்.

1818 ஆம் ஆண்டு மலையக பெருங்கலகம், 1823 ஆம் ஆண்டு கொஸ்வத்தை கிளர்ச்சி, 1826 ஆம் ஆண்டு பிம்தென்னே கிளர்ச்சி, 1835 ஆம் ஆண்டு மல்வத்து விகாரையின் கிளர்ச்சி, 1848 ஆம் ஆண்டு மாத்தளை பெருங்கிளர்ச்சி முதலான கிளர்ச்சிகளும் சுதந்திர வெற்றியின் அடித்தளங்களாக அமைந்தன.

1848 ஆம் ஆண்டு மாத்தளை பெருங்கிளர்ச்சி ஆரம்பமானதுடன் அதுவே இலங்கை சுதந்திர போராட்டத்தின் இறுதி கிளர்ச்சியாகவும் அமைந்தது.

பல்வேறு போராட்டங்கள், அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள், சர்வதேச இராஜதந்திர நகர்களும் கைக்கொடு, 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர கனவு நனவானது.

அடிமைப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் ஏற்பட்ட எதிர்ப்பு கிளர்ச்சிக்கு மத்தியில் உயிரை தியாகம் செய்த சேர் பொன் இராமநாதன், சேர் பொன் அருணாச்சலம், சித்திலப்பை போன்ற தலைவர்களும், தமிழ், சிங்கள, முஸ்லிம் மற்றும் பறங்கியர் போன்ற நாட்டு பற்றைக்கொண்ட அனைவரதும் அர்ப்பணிப்பையும் நாம் மறந்துவிட முடியாது.

சுதந்திர போட்டக்காரர்களின் போராட்டத்தினால் 1948 பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கை டொமினியன் அந்தஸ்துடைய சுதந்திரத்தைப் பெற்றது.

இலங்கை சுதந்திரமடைந்த நாடாக 1948 பெப்ரவரி மாதம் 4 ஆக அறிவிக்கப்பட்ட போதும் மக்களின் கொண்டாடங்களும் அது தொடர்பான பிற நிகழ்ச்சிகளும் பெப்ரவரி 17 ஆம் திகதிவரை நடைபெற்றிருந்தன.

பழைய பாராளுமன்றத்தில் பிரித்தானியக் கொடிக்குச் சமமாக தேசியக் கொடியும் ஏற்றப்பட்டதுடன், சுதந்திர இலங்கையின் புதிய பிரதமராகத் டி.எஸ். சேனாநாயக்க தெரிவு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சுதந்திர இலங்கையின் முதலாவது பாராளுமன்ற அமர்வு பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெற்றது.

பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதியன்று கண்டி மகுள் மதுவ சென்ற பிரித்தானியப் பேரரசரின் பிரதிநிதி இலங்கையின் தேசியக் கொடியை ஏற்றி, இலங்கை சுதந்திரம் அடைந்ததை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

ஆனால், டொமினியன் அந்தஸ்து படி இலங்கை சம்பிரதாயபூர்வமாக பிரித்தானிய முடியின் கீழ் சுய ஆட்சியாக அறிவிக்கப்பட்டதுடன், இலங்கையின் ஆளுநர், பிரித்தானிய முடியினால் நியமிக்கப்பட்டது.

இலங்கையின் சுதந்திரப் போராட்டம் உரிமைகளைவிட, சலுகைகளுக்கான கோரிக்கையாகவே பெருமளவிற்கு இருந்தது.

இந்தியாவைப் போன்று ஒரு பலமான சுதந்திரப் போராட்டம் இலங்கையில் இருக்கவில்லை என்பதால், இலங்கை 1972 ஆம் ஆண்டு வரை பிரித்தானிய முடியின் கீழுள்ள டொமினியன் நாடாகவே தொடர்ந்தது.

இவ்வாறாக, பிரித்தானிய அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்ற இலங்கை 1972 ஆம் ஆண்டு மே 22 ஆம் திகதி பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையில் தன்னைக் குடியரசாகவும் பிரகடனப்படுத்திக் கொண்டது

அதன்பின்னரும் சிலகாலம் வரையிலும் இலங்கையில் சுதந்திர தினம் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டது. அதன்பின்னரான கட்சி அரசியல் காரணமாக தற்போது சுதந்திர தினமாக கொண்டாடப்படுகின்றது.

இத்தகைய பாதையில் பயணித்து வந்த இலங்கை கடந்த சில வருடங்களாக வரலாறு காணாத பொருளாதார பின்னடைவை சந்தித்து.

கொரோனா தொற்று மற்றும் நாட்டின் பொருளாதார வங்குரோத்து காரணமாக 73, 74 ஆம் ஆண்டு சுதந்திரத் தின நிகழ்வுகள் மட்டுப்படுத்தப்பட்ட வகையிலேயே கொண்டாடப்பட்டன.

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகளை காண ஆரம்பித்தமையால், கடந்த 75 ஆவது சுதந்திர தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்தநிலையில் 76 ஆண்டுகளைக் கடந்த இலங்கையின் சுதந்திர தினத்தை வரலாற்றில் நினைவுக்கூற வேண்டியதும் முக்கியமானது என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இந்த வருட சுதந்திர தின விழா ‘புதிய தேசம் அமைப்போம் என்ற தொனிப்பொருளின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று இடம்பெறுகிறது.

இதனை முன்னிட்டு அரசாங்கத்தினால் பல விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனினும், 76 ஆவது சுதந்திரத் தினத்தில் இம்முறை ஜனாதிபதியின் உரை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் 5 ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறுவதால், அவர் கொள்கை பிரகடன உரையை முன்வைக்கவுள்ளார்.

இதனால், சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றமாட்டார் என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

76 ஆவது சுதந்திரத் தினக் கொண்டாட்டத்திற்காக கடந்த 30 ஆம் திகதி முதல் காலி முகத்திடலில் இராணுவத்தினர் ஒத்திகை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த ஒத்திகையின் போது, நான்கு பரசூட் வீரர்கள் விபத்துக்குள்ளாகி காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்கட்டான சூழ்நிலையிலுள்ள எமது நாடு இலங்கை அதிலிருந்து மீண்டு தமது வளங்களைக் கொண்டு பொருளாதார ரீதியில் முன்னேற இந்நாட்டின் பிரஜைகளாகிய நாம் அனைவரும் இந்த சுதந்திர தினத்தன்று உறுதி பூண்டுக்கொள்வோம்.

அனைத்து இலங்கையர்களுக்கும் தமிழ் எப். எம் செய்தி பிரிவின் சுதந்திர தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Share:

Related Articles