NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதியின் வெசாக் வாழ்த்துச் செய்தி!

புத்தம், தம்மம், சங்கம் என்ற மும்மணிகளால் ஆசீர்வதிக்கப்பட்ட வெசாக் பௌர்ணமி தினம், பௌத்த நாட்காட்டியின் மிக முக்கிய தினமாக உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெசாக் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்நன்னாள், கௌதம புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் பெறல், பரிநிர்வாணத்தின் புனித நிகழ்வுகளை நினைவுபடுத்துகின்றன.இத்தினத்தில் மனிதநேயம் மற்றும் கருணையுடன் கூடிய அறப்பணிகளை மேற்கொள்வதன் மூலம் கௌதம புத்தரின் போதனைகளுக்கு மரியாதை செலுத்துவதற்கான வாய்ப்பு உருவாகிறது.

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை நாடு சந்தித்து வரும் இந்த சவாலான நேரத்தில், காலத்தால் அழியாத கௌதம புத்தரின் தத்துவம் ஆறுதலுக்கான  வழியாக அமைந்துள்ளது. எனவே, இக்கட்டான காலகட்டத்தைக் கடந்து இயல்பு வாழ்க்கையை உருவாக்குவதற்கான சவாலை முறியடிக்க, புத்தர் கூறியது போல் ஒற்றுமையுடனும் நம்பிக்கையுடனும் ஒன்றிணைவது அவசியம். பௌத்த தத்துவத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள கருணை (மெட்டா), இரக்கம் (கருணா), சாந்தம் (முதிதா) மற்றும் சகிப்புத்தன்மை (உபேக்க்ஷா) ஆகிய நான்கு நற்பண்புகளைப் பின்பற்றி நாம் அந்தப் பாதையில் பயணிக்க வேண்டும்.

வளமான இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப புத்தரின் போதனைகளின்படி அனைவரும் ஒத்துழைப்புடனும் ஒற்றுமையுடனும் அணிதிரளுமாறு இந்த புனித நாளில் நான் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த வெசாக் அனுட்டானங்கள், அறியாமை இருளை அகற்றி இலங்கையை மறுமலர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் வரமாக அமையட்டும்! அனைத்து உயிர்களுக்கும் இன்பமான வெசாக் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles