NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனிந்துவின் வரலாற்று சாதனை: பதக்கங்களை அள்ளிய தமிழ் பேசும் வீரர்கள் !

கொழும்பு சுததாச விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 47ஆவது தேசிய விளையாட்டு விழாவின் 2ஆவது நாளான நேற்றைய (25) தினம் 14 போட்டி நிகழ்ச்சிகளுக்கான இறுதிப் போட்டிகள் நடைபெற்றதுடன், ஒரு புதிய போட்டிச் சாதனை முறியடிக்கப்பட்டது.

ஆண்களுக்கான 110 மீட்டர் சட்டவேலி ஓட்டம் தகுதிச் சுற்றில் மேல் மாகாணம் சார்பில் போட்டியிட்ட ஜனிந்து லக்விஜய, 14.18 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்ததுடன், புதிய போட்டிச் சாதனையையும் நிலைநாட்டினார்.

1994ஆம் ஆண்டு மேல் மாகாண வீரர் சமிந்த பொன்சேகா (14.28 செக்.) நிலைநாட்டிய சாதனையை 29 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனிந்து லக்விஜய முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இம்மாத முற்பகுதியில் கொழும்பில் நடைபெற்ற 101ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 110 மீட்டர் சட்டவேலி ஓட்டத்தில் ஜனிந்து லக்விஜய, புதிய இலங்கை (13.72 செக்.) படைத்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்த நிலையில், 47ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் 2ஆவது நாளில் பெரும்பாலான தமிழ் பேசும் வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்றனர்.

இதில் நேற்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 800 மீட்டரில் ஊவா மாகாணத்தைச் சேர்ந்த சி. அரவிந்தன், போட்டித் தூரத்தை ஒரு நிமிடமும் 54.94 செக்கன்களில் நிறைவு செய்து வெண்கலப் ப்பதக்கத்தை சுவீகரித்தார். தேசிய விளையாட்டு விழா போட்டிகளில் அரவிந்தன் வென்ற 2ஆவது பதக்கம் இதுவாகும். ஆண்களுக்கான 110 மீட்டர் சட்டவேலி ஓட்டத்தில் தேசிய சம்பியனான ஜனிந்து, இறுதியாக இம்மாத முற்பகுதியில் கொழும்பில் நடைபெற்ற 101ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கை சாதனையை முறியடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தங்கப் பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வட மாகாணத்தைச் சேர்ந்த அருந்தவராசா புவிதரன் வெண்கலப் பதக்கத்தை வென்று ஆறுதல் அடைந்தார். போட்டியில் அவர் 4.80 உயரத்தை தாவியிருந்தார்.

குறித்த போட்டியில் கோலூன்றிப் பாய்தல் முன்னாள் தேசிய சம்பியன் இஷார சந்தருவன் 5.00 மீட்டர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தையும், நடப்புச் சம்பியன் எரங்க ஜனித் 4.90 மீட்டர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். இதனிடையே, வட மாகாணம் சார்பில் போட்டியிட்ட எஸ். திஷாந்த் 4.70 மீட்டர் உயரம் தாவி 4ஆவது இடத்தைப் பிடித்தார்.

இந்த நிலையில், ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் வடமத்திய மாகாணம் சார்பில் போட்டியிட்ட ஏ.எஸ்.எம் அஸாம் (21.54 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும். பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் மத்திய மாகாணம் சார்பில் போட்டியிட்ட சபியா யாமிக் (24.42 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்தனர். ஆண்களுக்கான தட்டெறிதலில் கிழக்கு மாகாணத்தின் நட்சத்திர வீரர் இஸட்.ரி.எம் ஆஷிக் வெண்கலப் பதக்கம் வென்றெடுத்தார்.

போட்டியில் அவர் 44.94 மீட்டர் தூரத்தை எறிந்தார். இறுதியாக கடந்த 2019இல் பதுளையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டிகளில் ஆண்களுக்கான தட்டெறிதலில் அவர் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே, குறித்த போட்டியில் பங்குகொண்ட வட மாகாணத்தைச் சேர்ந்த இளம் வீரர் எஸ். மிதுன்ராஜ் 6ஆவது இடத்தைப் பிடித்தார்.

இதேவேளை, ஆண்களுக்கான 400 மீட்டர் சட்டவேலி ஓட்டத்தில் கிழக்கு மாகாண வீரர் மொஹமட் நௌஷாத் 4ஆவது இடத்துடன் ஆறுதல் அடைந்தார். 47ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் மெய்வல்லுனர் நிகழ்ச்சியின் கடைசி நாள் இன்றாகும்.

Share:

Related Articles