NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தடை செய்யப்பட்ட களைக்கொல்லிகள் கற்பிட்டியில் மீட்பு!

கற்பிட்டி கடற்பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திர படகு ஒன்றிலிருந்து தடைசெய்யப்பட்ட களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் என்பன நேற்று (29) கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கற்பிட்டி விஜய கடற்படை முகாமின் கடற்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடற்படை மற்றும் விசேட படகுப்பிரிவைச் சேர்ந்த கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 43 மற்றும் 46 வயதுடைய இரண்டு மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட களைக் கொல்லிகள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் என்பன 22 உரைப் பைகளில் அடைத்து கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அது சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியானவை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக மீன்பிடிக் கப்பலொன்றில் கொண்டு வரப்பட்டுள்ளமை சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இந்த தடைசெய்யப்பட்ட களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட களைக்கொல்லிகள் மற்றும் அதனை கொண்டுவருவதற்காக பயன்படுத்தப்பட்ட இயந்திரப் படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles