பங்களாதேஷ் – இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் இலங்கை அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் சதங்களை பெற்றுள்ளனர்.
ஒரே டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் இரண்டு இலங்கை வீரர்கள் சதம் அடிப்பதும் இதுவே முதல் முறையாகும்.
இந்த போட்டியினூடாக இலங்கை அணி நேற்று(24) டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளை புதுப்பித்துள்ளது.
போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கும் போது, தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக விளையாடி இலங்கை அணி, 5 விக்கெட் இழப்புக்கு 119 ஓட்டங்களை எடுத்திருந்தது.
அதன் பின்னர், அணித்தலைவர் தனஞ்சய டி சில்வாவுடன் இணைந்த கமிந்து மெண்டிஸ், 7ஆவது விக்கெட்டுக்காக 173 ஓட்டங்களை பெற்று வெற்றிகரமான இணைப்பாட்டத்தை உருவாக்கி இலங்கை இன்னிங்ஸை வலுப்படுத்தினார்.
டெஸ்ட் அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டதற்கு முழு திறமையை வௌிப்படுத்தி கமிந்து மெண்டிஸ், டெஸ்ட் போட்டிகளில் தமது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்து 164 ஓட்டங்களையும் குவித்தார்.
அத்துடன் கமிந்து மெண்டிஸ் குறைந்த இன்னிங்ஸ்களில் இரண்டு டெஸ்ட் சதங்களை அடித்த முதல் இலங்கை வீரருடன் முதல் 7 டெஸ்ட் போட்டிகளுக்குள் இரண்டு சதங்களை பெற்ற முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இலங்கை அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த 6வது துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையில் அவர் இணைந்தார்.
மேலும் 10 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை வீரர் ஒருவர் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்திருப்பது சிறப்பம்சமாகும்.
இதன்படி, இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக 418 ஓட்டங்களை பெற்று பங்களாதேஷ் அணிக்கு 511 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
அந்த இலக்கை நோக்கி துடுப்பாடி வரும் பங்களாதேஷ் அணி நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 47 ஓட்டங்களை எடுத்து இக்கட்டான நிலையில் உள்ளது.