விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் அறுவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் டிசம்பர் 8 ஆம் திகதி எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான மீனவர்கள் எண்மரில் அறுவரை ஊர்காவற்துறை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
மேலும் இருவருக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நீதிமன்ற காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
மீனவர்களின் விளக்கமறியல் காலப்பகுதி இன்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஷ்கரன் 6 மீனவர்களும் இலங்கை கடற்பகுதிக்குள் மீண்டும் மீன்பிடித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்தும், விசைப்படகு ஓட்டுநர்களான 2 பேருக்கு தலா ஒன்பது மாதம் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
பின்னர் விடுதலை செய்யப்பட்ட 6 மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.