புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணும் விடயத்தில் பாராளுமன்றில் கூட்டாக செயற்படுவது தொடர்பில் தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளுக்கு இடையே இன்று மாலை நடைபெறவிருந்த சந்திப்பு மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு நேற்று முன்தினம் நடைபெறவிருந்த நிலையில் அது இன்றைய தினம் வரையில் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு இடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்தக் கூட்டத்துக்கான இணக்கப்பாடு எட்டப்பட்டது.
அதன்படி, யாழ்ப்பாணத்தில் இன்று மாலை 4 மணியளவில் இந்த சந்திப்பை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த சந்திப்புக்கான அழைப்பு கடிதம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோரால் நேற்று முன்தினம் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் C.V.K.சிவஞானத்திடம் கையளிக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த கூட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி பங்கேற்பதற்குக் கால அவகாசம் கோரிய நிலையில் திகதி தீர்மானிக்கப்படாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் C.V.K. சிவஞானம், குறித்த இறுதி சந்திப்பில் பங்கேற்பது தொடர்பான தீர்மானம் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.