NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ச உள்ளிட்ட 75 பேர் ரணில் பக்கம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் 75 பேர் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவின் கொழும்பில் உள்ள வீட்டிற்கு சென்று ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கட்சி தலைமையகத்துக்கு நேற்று (29) சென்று ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவிடமும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

இத் தகவலை கொழும்பில் இருந்து வெளி வரும் “லங்காதீப” என்ற சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ச, பிரசன்ன ரணதுங்க, மஹிந்தானந்த அளுத்கமகே, கஞ்சன விஜேசேகர, ரமேஷ் பத்திரண, எஸ் பீ. திஸாநாயக்க, கனக ஹேரத், ஜானக வக்கும்புர, மொஹான் பிரியதர்ஷன, கீதா குமாரசிங்க உள்ளிட்டவர்கள் இந்த சந்தர்ப்பத்தில் கலந்துக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவுடன் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கருத்து தெரிவித்த பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள்,

ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதித் தேர்தல் வெற்றியை உறுதி செய்வதற்காக தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவான 150 உறுப்பினர்கள் தற்போது ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்ய இணைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன வேறொரு ஜனாதிபதி வேட்பாளரை முன்னிலைப்படுத்துவதாக மேற்கொண்ட தீர்மானத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியில் ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்க தயாராக உள்ளவர்களின் பயணத்தை மேலும் வேகமாக்கியுள்ளதாக வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளதாக லங்காதீப செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமிக்கும் போது பொதுஜன பெரமுன உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட 134 வாக்குகளில் 59 வாக்குகள் மாத்திரமே சார்பாக கிடைக்கப்பட்டன.

அதேவேளை “இலங்கையைக் கட்டியெழுப்பிய தலைவர்” எனத் தெரிவித்தாலும் கூட ரணில் விக்கரமசிங்க கடுமையான உள்ளகத் தோல்வியைச் சந்தித்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது வஜிர அபேவர்தன மேற்படி உறுப்பினர்களுடனான சந்திப்பில் வெளிப்படுத்திய சில கருத்தின் மூலம் வெளிப்பட்டிருந்தது.

இதற்கு மேலதிகமாக “நாடு மீண்டு விட்டது” என்று கூறி மேற்கொள்ளப்படும் இந்த தேர்தல் நடவடிக்கைகள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கணக்கிட முடியாத தோல்வியை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய மொட்டுக் கட்சி எனப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்துள்ளவர்கள் தோல்வியடைந்தவர்கள் எனவும் பொதுமக்களின் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

Share:

Related Articles