NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணியை வழங்க அமைச்சரவை அனுமதி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணியை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் தொழில்சாலைகள் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய செப்டெம்பர் 02ஆம் திகதி உலக தெங்கு தினத்தை முன்னிட்டு நாட்டின் இரண்டாவது தெங்கு முக்கோணத்தை யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களை மையப்படுத்தி வடக்கில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், கடந்த வருடத்தில் உர தட்டுப்பாடு காரணமாக பெருந்தோட்டத்துறை சரிவை சந்தித்திருந்தது. உரத் தட்டுப்பாட்டினை போன்றே சீரற்ற காலநிலையும் பெருந்தோட்ட கைத்தொழிலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதனால் 50 கிலோ யூரியாவின் விலை 30,000 ரூபாவாக அதிகரித்திருந்த நிலையில் தற்போது அதன் விலையை 9,000 வரையில் மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்நிலைமையின் கீழ் வருட இறுதியில் 300 மில்லியன் கிலோகிராம் தேயிலையை ஏற்றுமதி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கமைய இவ்வருட இறுதிக்குள் 290 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்ய முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒன்லைன் முறையில் உலக சந்தையில் தேயிலை விற்பனை செய்யும் முறைமை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஈரானிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 500 மில்லியன் டொலர் பெறுமதியான எரிபொருளுக்கு பதிலீடாக தேயிலை ஏற்றுமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனால் எமக்கு கிடைக்காமல் போன ஈரான் தேயிலை சந்தை வாய்ப்பை மீண்டும் தொடர்ச்சியாக பெற்றுக்கொள்வதே எமது எதிர்பார்ப்பாகும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles