நுவரெலியா உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில், நுவரெலியா – ஹட்டன் A7 பிரதான வீதியின் நானுஓயா சந்திக்கு அருகில் வீதி தாழிறங்கியுள்ளதால் ஒரு வழி போக்குவரத்து இடம்பெற்று வருவதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் சிறிய அளவிலான வெடிப்புக்கள் ஏற்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் பாரிய அளவில் வீதி தாழிறங்கியுள்ளது.
தற்போது குறித்த பகுதி ஒரு வழி போக்குவரத்து இடம்பெற்று வருவதால் சாரதிகள் அவதானத்துடன் வாகனத்தைச் செலுத்துமாறு நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்
எனவே குறித்த இடத்தில் விபத்து ஏற்படுவதற்கு முன் உரிய அதிகாரிகள் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டும் என சாரதிகளும் , பொது மக்களும் கோரிக்கை விடுத்ததையடுத்து, தாழிறங்கியுள்ள குறித்த வீதிப்பகுதி விரைவில் புனரமைக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வீதி தாழிறக்கியுள்ளமை குறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மூலம் அனர்த்த முகாமைத்து அதிகாரிகளின் ஆலோசனைகளை பெற்று இதற்கான காரணத்தை கண்டறிவதற்கான ஆய்வுகளும் இடம்பெற்றுவருவதோடு, குறித்த பகுதியை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த வீதியில் ஏற்பட்பட்ட தாழிறக்கம் காரணமாக வீதியில் ஏற்படும் ஆபத்து நிலைமை குறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அவதானத்துடன் உள்ளது எனவும் வீதி தாழிறக்கம் காரணமாக பாரிய பாதிப்புக்கள் ஏற்படாது உறுதிப்படுத்தியுள்ளனர்.