நீர் பற்றாக்குறை காரணமாக பிரான்ஸின் தெற்குப்பகுதியில் நிர்மாணப் பணிகளுக்கு அனுமதி வழங்குவது இடைநிறுத்தபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸின் வார் பிரிவில் உள்ள 9 கம்யூன்களை உள்ளடக்கிய அதிகாரசபையினால் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு அனைத்து புதிய கட்டுமானங்களுக்குமான அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.
புதிய நிர்மாணங்கள் மின் விநியோகத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்பதுடன், குறித்த பகுதியில் குறைந்து வரும் நீர் வளங்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.
2022 ஆம் ஆண்டு அதாவது குறித்த தடை விதிக்கப்படுவதற்கு முன்னதாக அதிகாரப் பகுதிக்குட்பட்ட பல கம்யூன்கள் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொண்டிருந்தன.
மேலும், நாளொன்றுக்கு பயன்படுத்தக்கூடிய நீரின் அளவு குறித்தும் வரையறுக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், இந்த நடவடிக்கைகளுக்கு கட்டிட நிர்மாணிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், குறித்த தடை நியாயமற்றது எனவும் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.
இதன்படி, திட்ட அனுமதிச் செயல்பாட்டின் போது தண்ணீர் பற்றாக்குறைக்கான போதுமான ஆதாரங்களை அதிகாரிகள் வழங்கவில்லை என நிர்மாணிப்பாளர்கள் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
எவ்வாறாயினும், டூலோனில் உள்ள நிர்வாக நீதிமன்றம், 2021 ஆம் ஆண்டில் அதிகாரிகளால் நடத்தப்பட்ட ஆய்வுகளை சுட்டிக்காட்டி நீர் பற்றாக்குறை நிலவுவதை உறுதிப்படுத்தியது.
இதன்படி, நீதிமன்றம் குறித்த பகுதியில் வறட்சி கட்டுப்பாடுகளை முன்னிலைப்படுத்தியதுடன், நீச்சல் குளங்களுக்கு நீர் நிரப்புவதற்கு தடை விதித்தது.
இந்த நிலையில், இப்பகுதியில் நீண்ட காலமாக தண்ணீர் பிரச்சினைகள் காணப்பட்டாலும் வலையமைப்பின் மோசமான பராமரிப்பு காரணமாக இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு நிர்மாணிப்பாளர்கள் தீர்மானித்தனர்.
ஆனாலும், இவர்களது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. தடைக்கு முன்னதாக ஏற்கப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட அனுமதிகள் குறித்து தொடர்ந்தும் பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே, இவ்வாறான விதிகள் தற்போது நடைமுறையில் உள்ள கம்யூன்கள் ஒரு சில மட்டுமே பிரான்சில் காணப்படுகின்றன.
இருப்பினும், இந்த தீர்ப்பிற்குப் பிறகு மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் பற்றாக்குறையை எதிர்கொள்வதற்கு உதவும் வகையில் நிர்மாணப் பணிகளுக்கு அனுமதி வழங்குவதை இடைநிறுத்தும் உத்திகளை பெரும்பாலான கம்யூன்கள் அவ்வப்போது கையாண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.