நுகர்வோர் விவகார அதிகார சபையைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி வர்த்தகர்களுக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்து பண மோசடியில் ஈடுபடும் சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த போலி தொலைபேசி அழைப்புகள் மூலம் பொருட்களில் பிரச்சனைகள் இருப்பதாகவும், இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறி வருவதாக மேலும் தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட அழைப்புகளை மேற்கொண்ட மோசடியாளர்கள், தாம் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் உயர் அதிகாரிகள் எனக் கூறி, வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களிடம் அத்தகைய சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் கோரியுள்ளனர்.
இதன் காரணமாக, வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு அத்தகைய அழைப்பு வந்தால், அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது தமது சபைக்கோ தகவல் தெரிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை கேட்டுக் கொண்டுள்ளது.