நெதர்லாந்து கடற்பகுதியில் 3 ஆயிரம் கார்களுடன் சென்ற சரக்கு கப்பல் தீப்பற்றியதில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 20 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஜெர்மனியில் இருந்து சுமார் 3,000 கார்களுடன் ஃப்ரீமேன்டில் ஹைவே என்ற சரக்கு கப்பல் எகிப்து நோக்கி புறப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நெதர்லாந்து நாட்டின் அமெலாண்ட் தீவு அருகே சென்று கொண்டிருந்தபோது கப்பலில் அடுக்கப்பட்டிருந்த 25 எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று திடீரென தீப்பற்றியதுடன் மற்ற கார்களுக்கும் பரவியதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
மேலும் குறித்த தீயை அணைக்க கப்பல் பணியாளர்கள் மேற்கொண்ட 16 மணி நேர முயற்சி தோல்வி அடைந்துள்ளதுடன் தகவலின் பேரில் நெதர்லாந்து தீயணைப்பு படையினர் அங்கு வருகை தந்து கரும் புகையுடன் எரிந்து கொண்டிருக்கும் கப்பலின் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தக் கப்பலில் 23 ஊழியர்கள் காணப்பட்டுள்ளதுடன் இவர்களில் பலர் இந்தியர்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில் குறித்த தீவிபத்தில் இந்திய ஊழியர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.