புற்று நோயாளர்களுக்காக கொண்டுவரப்படும் மருந்துகளில் 60 வீதமானவை பதிவு செய்யப்படாத நிறுவனங்களிலிருந்து பெறப்படுவதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்திக கன்கந்த சிங்கள பத்திரிகையொன்றுக்கு இக்கருத்தை தெரிவித்துள்ளார்.
புற்று நோய் மருந்துகளை கொள்வனவு செய்யும் போது, மருந்துகள் ஆணைக்குழுவினால் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை தெரிந்து கொள்வனவு செய்யுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் தரம் தொடர்பில் பரிசீலிக்க இலங்கையில் ஆய்வகமொன்று இல்லாதமை இதற்கான பிரதானமான காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தரமற்ற மருந்துகளை உட்கொள்வதினால் அவை, நோயாளியின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை எனவும், விசேடமாக மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு அருகில் இவ்வாறான தரமற்ற மருந்து விற்பனை இடம்பெற்று வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.