NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பயணப் பொதியில் இருந்த 10 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள்…!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணப் பொதியுடன் கடந்த மாதம் காணாமல் போனதாக கூறப்படும் “குஷ்” போதைப் பொருளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நேற்று (08) கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட “குஷ்” வகையைச் சேர்ந்த இந்த போதைப் பொருள் 10 கோடி ரூபா பெறுமதியானவை என தெரிவிக்கப்படுகிறது.

கனடாவில் இருந்து டுபாய்க்கு கொண்டு வரப்பட்ட இந்த போதைப்பொருள், கடந்த நவம்பர் மாதம் 14 ம் திகதி பிற்பகல் 02.40 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளமை விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மேல் மாகாண புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதுடன், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் மேற்படி போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட பயணப் பொதியில் 19 கிலோ 588 கிராம் “குஷ்” போதைப் பொருள் இருந்ததாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும், கைப்பற்றப்பட்ட போதைப் பொருளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles