NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாகிஸ்தானில் இரு வேறு பஸ்கள் பள்ளத்தில் விழுந்து விபத்து – 37 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், லாஸ்பெலா மாவட்டத்தில், மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஈரானில் இருந்து சுமார் 70 பக்தர்களை ஏற்றிக்கொண்டு இன்று பஞ்சாப் நோக்கி சென்ற பஸ், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது.

தகவல் அறிந்த பொலிஸார் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பஸ்ஸில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் லாகூர் அல்லது குர்ரன்வாலாவைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. விபத்து தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டிருப்பதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு பஸ், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ் கடுமையாக சேதமடைந்து உருக்குலைந்தது. பயணிகள் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கினர்.

இதுபற்றி தகவல் அறிந்த பொலிஸார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதற்குள் உள்ளூர் மக்கள் மீட்பு பணியை தொடங்கினர். பஸ்ஸுக்குள் சிக்கியிருந்தவர்களின் உடல்களை மீட்டனர். குழந்தைகள், பெண்கள் உள்பட 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதுடன் விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் சாதனோதி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles