NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘பாகிஸ்தான்’ பெயர் அச்சிடப்பட்ட ஜெர்சியை அணிவதற்கு இந்தியா ஆட்சேபனை!

ICC சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் ‘பாகிஸ்தான்’ பெயர் அச்சிடப்பட்ட ஜெர்சியை அணிவதற்கு இந்தியா ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

குறித்த தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானுக்கு செல்வதற்கு இந்தியா அணி மறுத்துள்ள நிலையில், இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை டுபாயில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

எனினும் போட்டி நடத்துனரான பாகிஸ்தான் மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆகியவற்றின் பெயர்கள், தொடரில் பங்கேற்கும் வீரர்களின் ஜெர்ஷியில் அச்சிடப்படும். 

இருப்பினும் தற்போது இந்தியா அதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பெயரை வெளிப்படுத்த விரும்பாத அதிகாரி ஒருவர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை, விளையாட்டில் அரசியலை புகுத்துவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். 

அத்துடன் ஐ.சி.சி சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் ஆரம்ப அங்கமான அணி தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ரோஹித் சர்மாவை பாகிஸ்தானுக்கு அனுப்புவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

எனினும் இவ்வாறான விடயங்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆதரிக்காது என நம்புவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பெயரை வெளிப்படுத்த விரும்பாத அதிகாரி கூறியுள்ளார்.

Share:

Related Articles