NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாஜக வெற்றி பெற்றால் சீதைக்கு பிரம்மாண்ட கோயில் கட்டுவோம் – அமித்ஷா

என்டிஏ கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்றால், சீதை பிறந்த சீதாமர்ஹியில் சீதைக்கு பிரம்மாண்ட கோயில் கட்டுவோம் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பீகாரில் சீதாமர்ஹி நகரில் நேற்று (மே 16) நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா,

“அதிகார அரசியலுக்காக, தனது மகனை முதலமைச்சராக்க லாலு பிரசாத் யாதவ், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரை எதிர்ப்பதிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் கழித்த காங்கிரஸ் கட்சியின் மடியில் போய் அமர்ந்துள்ளார். பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது பற்றி காங்கிரஸும், ஆர்ஜேடியும் ஒருபோதும் நினைக்கவில்லை. மோடி அரசுதான் அதை செய்தது. பீகாருக்கு வளர்ச்சி அரசியல்தான் தேவை, காட்டுராஜ்ஜியம் அல்ல.

நாங்கள் வாக்கு வங்கியைக் கண்டு பயப்படுவதில்லை. அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு பிரம்மாண்ட கோயிலை கட்டியவர் பிரதமர் மோடி. தற்போது, சீதை பிறந்த இடத்தில் மிகப் பெரிய கோயில் கட்டும் பணிதான் எஞ்சியிருக்கிறது. சீதாமர்ஹியில் சீதா தேவிக்கு பாஜக பிரம்மாண்ட கோயிலை கட்டும். ராமர் கோயிலுக்குச் செல்லாமல், ஒதுங்கியவர்களால் (எதிர்க்கட்சிகள்) நிச்சயமாக சீதா தேவிக்கு கோயில் கட்ட முடியாது. சீதைக்கு யாராவது கோயில் கட்ட முடியும் என்றால், அது பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடியால் தான் முடியும்” என தெரிவித்தார்.

பீகாரில் மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், சீதாமர்ஹி தொகுதிக்கு மே 20-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பீகாரில் மொத்தமுள்ள 40 இடங்களில் 39 இடங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles