(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
புகைபிடித்தல், உணவுப்பழக்கம், உடற்பயிற்சியின்மை மற்றும் மனஅழுத்தம் ஆகியனவே இதய நோய்க்கான பிரதான காரணங்களாகும் என களுத்துறை பொது வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணர் வைத்தியர் பாதிய ரணசிங்க தெரிவித்துள்ளார்.
40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாரடைப்புக்கு ஆளாவதாக வெளியாகும் செய்திகள் மற்றும் அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாடசாலை செல்லும் வயதுடைய பிள்ளைகள் கூட மன அழுத்தத்தினால் சிறு வயதிலேயே மாரடைப்புக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாக தெரிவித்த அவர், உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் சிறுவயதிலேயே மாரடைப்புக்கு முகங்கொடுக்கும் அபாயத்தை தவிர்க்க முடியும் என களுத்துறை பொது வைத்தியசாலையின் இருதய நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் பதியா ரணசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.