NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரதான சூத்திரதாரிகள் அரசில் இருப்பதனால் தானா பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காமல் உள்ளது? – சஜித்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான உண்மை வெளிவராமல், நியாயமான, விசாரணை நடத்தப்படாமல் இருப்பதற்குச் சம்பந்தப்பட்டவர்கள் அரசில் இருப்பதால் தானா? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து வெளிப்படைத் தன்மையுடன் கூடிய பாரபட்சமற்ற மற்றும் நியாயமான விசாரணை நம் நாட்டில் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தோம்.

அந்தக் கொடூரத் தாக்குதலால் பல உயிர்கள் பலியாகியுள்ளன. இந்தக் காட்டுமிராண்டித்தனமான – கொடூரமான வன்முறைத் தாக்குதலை அன்றும், இன்றும், நாளையும் நாமும் முழு மக்களும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

தற்போது நமது நாட்டில் இந்தக் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதல் குறித்து நியாயமான தேசிய விசாரணை நடைபெறவில்லை என்பதைப் பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்தத் தாக்குதலில் உயிரிழந்த நம் நாட்டு மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

நீதி நிலைநாட்டப்பட வேண்டும். தற்போதைய அரசு கூட நியாயமான விசாரணை நடத்தப்படும் என்ற வாக்குறுதியை அளித்து தான் நிறுவப்பட்டது. இன்று தேசிய மட்டத்திலான விசாரணை முன்னெடுக்கப்படாததால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதற்காக உருவான அரசு இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருந்தால் அதன் உண்மைத் தன்மையை அறிய வேண்டும்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அனைத்து விசாரணைகளும் தற்போது மறைக்கப்பட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் அடிப்படையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மதவாத மற்றும் இனவாத தாக்குதல்களை நாம் மறக்க முடியாது.

இனவாதத்தையும் மதவாதத்தையும் பரப்பி தேசிய ஒருமைப்பாட்டைக் காட்டி அமைச்சுப் பதவிகளைப் பெற்றவர்களினால் பிராதன சூத்திரதாரிகளாகச் செயற்பட்டவர்களை வெளிப்படுத்தத் தவறிவிட்டனர்.

இது தொடர்பில் உண்மையைக் கண்டறிய அரசுக்கு முதுகெலும்பில்லை என்றாலும் சர்வதேச சமூகம் இந்த உண்மையை வெளிப்படுத்தி வருகின்றது. இது தொடர்பாக வெளிப்படையான விசாரணை தேவை.

இது தொடர்பாக தெரிவுக்குழு நியமிக்கப்படும் என்றும் பேசப்படுகின்றது. இது திருடனின் தாயாரிடம் மை பார்ப்பது போன்றாகும். இந்த இரத்த வெறி கொண்ட அரசால் உண்மையை வெளிக்கொண்டு வர முடியாது என்பதால் நியாயமான சர்வதேச விசாரணை அவசியம்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசின் கீழ் தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்புடன் நியாயமான விசாரணைகள் நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் என தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles