மனித கடத்தல் அச்சம் காரணமாக பிரான்ஸ் விமான நிலையத்தில் பல நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 275 இந்திய பிரஜைகளை ஏற்றிச் சென்ற விமானம் இந்தியாவை சென்றடைந்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நிகரகுவாவுக்குப் பயணித்த ஏ340 ரக விமானம், பாரிஸின் கிழக்கே உள்ள சாலோன்ஸ் -வோட்ரி விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறக்கப்பட்ட நிலையில் அதிகாரிகளால் அந்த விமானம் தடுத்து நிறுத்தப்பட்டது.
அதில் பயணித்த சில பயணிகள் மனித கடத்தலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து குறித்து விமானம் தடுத்து நிறுத்தப்பட்டதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் விமானத்தில் இருந்தவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பலர் பிரான்சில் தஞ்சம் கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு தஞ்சம் கோரியவர்களில் பெரும்பாலானோர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணியாற்றிய இந்திய பிரஜைகள் என நம்பப்படுகின்றது.
குறித்த விமானத்தில் இருந்தவர்கள் அமெரிக்கா அல்லது கனடாவுக்குள் நுழைவதற்கு முன்பு நிகரகுவாவுக்குப் பயணம் செய்திருக்கலாம் என பிரான்ஸ் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இந்தநிலையில் குறித்த விமானம் நிகரகுவாவிற்கு அனுப்பப்படாமல் இந்தியாவின் மும்பை விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டமைக்கான காரணங்கள் வெளிப்படுத்தப்படவில்லை.
இந்தநிலையில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை குறித்த விமானம் மும்பை விமான நிலையத்தை வந்தடைந்ததாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.