NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புத்தளத்தில் வெள்ளப்பெருக்கினால் 61 பேர் பாதிப்பு!

புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 15 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தாராக்குடிவில்லு கிராம சேவகர் பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேரும், அங்குனவில கிராம சேவகர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 18 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஆனமடு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சங்கட்டிக்குளம் கிராமத்தில் 06 குடும்பங்களைச் சேர்ந்த 23 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், அவர்களின் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை முந்தல் மற்றும் ஆனமடுவ ஆகிய பிரதேச செயலகங்கள் முன்னெடுத்து வருகின்றன.

இதேவேளை, தெதுரு ஓயாவின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில தினங்கள் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக, தெதுரு ஓயாவின் நான்கு வான் கதவுகள் தலா நான்கு அடி உயரத்தில் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் குறித்த நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 11200 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக தெதுரு ஓயா நீர்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

எனவே, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தை அண்டிய பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, புத்தளத்தில் உள்ள தப்போவ, இங்கினிமிட்டிய மற்றும் ராஜாங்கன ஆகிய நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் உயர்வடைந்து காணப்படுகின்ற போதிலும், வான் கதவுகள் எதுவும் திறக்கப்படவில்லை என புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமைநேர அதிகாரியொருவர் தெரிவித்தார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles