அண்மையில் நடைபெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் 3 வினாக்கள் வெளியானதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமையைக் கருத்திற் கொண்டு கல்வி அமைச்சு எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் கல்வி அமைச்சுக்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,849 பரீட்சை நிலையங்களில் கடந்த 15ஆம் திகதி நடைபெற்றது. 323,879 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
புலமைப்பரிசில் பரீட்சையின் பகுதி 1 வினாத்தாளில் 3 வினாக்கள் கசிந்தமை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும், கசிந்ததாகக் கருதப்படும் கேள்விகளுக்கான புள்ளிகளை முழுமையாக வழங்குவதற்கு பரிந்துரைத்துள்ளது.
மேலும், மீண்டும் பரீட்சை நடத்தப்பட மாட்டாது என்று, கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.