பேருந்தை நிறுத்தாததால் ஆத்திரமடைந்த நபர் ஒருவர், மூவருடன் சேர்ந்து லங்கம பேருந்து சாரதியை கடத்திச் சென்று தாக்கிய நிலையில் பாதிக்கப்பட்ட சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பண்டாரகம ரைகமவில் இருந்து தெஹிவளை ஹெட்டியாவத்தை வரை தினமும் பயணிக்கும் லங்கம பேருந்தின் சாரதி ஒருவரே தாக்குதலுகுள்ளாகியுள்ளார்.. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த சாரதி கொழும்பு நோக்கி பேருந்தை ஓட்டிச் செல்லும் போது, களனிகம மற்றும் விதாகம பகுதிக்கு இடைப்பட்ட பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த ஒருவர் பல நாட்களாக பேருந்தை நிறுத்த முயற்சித்த போதும், சாரதி பேருந்தை அந்த இடத்தில் நிறுத்தாமல் தொடர்ந்து செலுத்தியுள்ளார்.
அந்த பேருந்து டிப்போவால் லிமிடெட் ஸ்டொப் பேருந்தாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் அவர் இவ்வாறு நிறுத்தாமல் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. பல நாட்களாக பேருந்தை நிறுத்தாததால் குறித்த நபர் சாரதியின் கைப்பேசிக்கு அழைத்து மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் அந்த நபர் மேலும் 3 பேருடன் கடந்த 25ம் திகதி இரவு சாரதி வீட்டிற்கு சென்றுள்ளார்.சாரதியை வீட்டில் இருந்து வெளியே அழைத்துச் சென்று அவர்கள் வந்த காரில் கொத்தலாவல உயன்வத்தை லேக் வீதிக்கு அழைத்துச் சென்று வாள் ஒன்றை கழுத்தில் வைத்து சரமாரியாக தாக்கிய பின்னர் சாரதியை அங்கேயே விட்டுவிட்டு மர்மநபர்கள் காரில் தப்பிச் சென்றனர்.
உடஹமுல்ல டிப்போவின் சாரதியான 45 வயதான ரசிக பெரேரா என்பவரே தாக்குதலில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக பண்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பண்டாரகம பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் படி, நடவடிக்கை எடுத்த பொலிஸார், பண்டாரகம, விதாகம பிரதேசத்தை சேர்ந்த பிரதான சந்தேகநபரை கைது செய்தனர்.
சந்தேகநபர் கொழும்பு சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் சாரதியாக பணிபுரிபவர் என தெரியவந்துள்ளது. இது தொடர்பில் இரண்டு சகோதரர்கள் உட்பட நால்வர் பண்டாரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், அன்றைய தினம் அவர்களை அடையாள அணிவகுப்பிற்கு ஆஜர்படுத்துமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.