பொப் இசையுலகில் குறுகிய காலத்தில் தன் காந்தக்குரலாலும் நடனத்தாலும் புகழின் உச்சிக்கு சென்று துயரமிகு அவமானங்களுடன் மரணித்த மைக்கேல் ஜாக்சனின் 15ஆவது நினைவு நாள் இன்று.
புகழின் உச்சிக்கு சென்று வாழவேண்டிய மத்திய பகுதியில் தனது 50 வது வயதில் மர்ம மரணத்தை தழுவினார் மைக்கேல் ஜாக்சன்.
இளம் வயதில் ஒரு இசைக்குடும்பத்தில் 7 பேரில் ஒருவராக பிறந்தவர். குடும்பம் வறுமையில் வாடிய நிலையில் இசை ஆர்வம் மைக்கேலுக்கு தொற்றிக்கொள்ள தனது 6 வது வயதில் ஜாக்சன் 5 என்கிற குழுவில் தனது 4 சகோதரர்களுடன் இணைந்தார். ஆரம்பத்தில் வழக்கமான இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்த அவர்கள் குழுவில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை.
பின்னர் 1971 ஆம் ஆண்டு முதல் தனியாக பாப் பாடல்களை பாடத்தொடங்கினார். கிளப்புகளிலும் ஜாக்சன் பாட ஆரம்பித்தார். அவரது வித்தியாசமான குரல் பாப் இசை உலகின் மன்னன் என்று ரசிகர்கள் கொண்டாடினர். தந்தை கொடுத்த கடுமையான இசை, நடன பயிற்சி மைக்கேல் ஜாக்சனை மேலும் உச்சத்திற்கு கொண்டுச் சென்றது. தனது 9 வது வயதில் உலகப்புகழ்ப்பெற்ற டயானாவுடன் இணைந்து பாட ஆரம்பித்தார். அது அவரை புகழின் உச்சிக்கு கொண்டுச் சென்றது.
1972 ஆம் ஆண்டு தனது 14 வது வயதில் காட் டு பி தேர் ஆல்பம் புகழ்பெற்றது. அதன் பின்னர் மேலும் பென், ஃபார் எவர் மி உள்ளிட்ட பல ஆல்பங்களை தயாரித்தார். அதன் பின்னர் 7 ஆண்டுகள் கழித்து 1979 ஆம் ஆண்டு ஆப் தி வால் என்கிற ஆல்பத்தை வெளியிட்டார். அதில் இருந்த 4 பாடல்கள் அமெரிக்க அளவில் அவரை இசையுலகின் நாயகனாக மாற்றியது. இப்பாடல்கள் அமெரிக்காவின் டாப் டென் பாடல்களில் இடம் பெற்றது. கிராமி அவார்டு உள்ளிட்ட பல விருதுகளை வென்றார்.
பீட்டில்ஸ், அப்பா உள்ளிட்ட பல பெரிய இசைக்குழுக்கள் கோலோச்சிய காலக்கட்டத்தில் மைக்கேல் தன்னந்தனியனாக உருவெடுத்தார். அவரது ஆல்பங்களில் நவீன ஒலி-ஒளி அமைப்புகள், நடன அசைவுகள் என புதுமைகளை புகுத்தினார். வெறுமனே பாடல்களாக இல்லாமல் அதில் ஒரு சின்ன கான்செப்ட் இருக்கும் வகையில் அல்லது உலகை பாதிக்கும் பிரச்சினைகளை சொல்வதுபோல் அமைத்தார்.
1982 ஆம் ஆண்டு உலகப்புகழ்ப்பெற்ற திரில்லர் ஆல்பத்தை ஜாக்சன் வெளியிட்டார். மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையில் மட்டுமல்ல, இன்றளவும் இசையுலகின் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது த்ரில்லர் தான். இந்த ஆல்பத்தில் உள்ள பாடல்கள் மூலம் மைக்கேல் ஜாக்சன் ஆப்ரிக்க ஆசிய நாடுகளிலும் இசை உலகின் நாயகனானார். மைக்கேல் ஜாக்சனின் காட்சிப்படுத்தி எடுக்கப்பட்ட ஆல்பங்கள் உலக அளவில் பாராட்டப்பட்டது. த்ரில்லர் 7 கிராமிய விருதுகளை அள்ளியது.
மைக்கேல் ஜாக்சன் பாடல்களிலு மட்டுமல்ல நடன அசைவுகள், மேடையில் அவர் காட்டும் வித்தைகள் மூலம் ரசிகர்கள் அவரை தெய்வமாக கொண்டாடினர். திரில்லரில் வரும் பில்லிஜீன் பாடலில் 1983 ஆம் ஆண்டு மேடையில் திடீரென பின்னோக்கி நகரப்படும் மூன் வாக் நடனத்தை அறிமுகப்படுத்தினார். அதுமுதல் மூன் வாக் நடனம் உலகம் முழுவதும் பரவியது. அதுமட்டுமல்ல சிறு சிறு சேஷ்டைகள், டக்கென நடனத்தை மாற்றுவது, கால்களில் வித்தியாச நடைமுறை, நடன அசைவுகள் காரணமாக அவர் தனித்துவமான புகழ் பெற்றார்.
1987 பேட் என்கிற ஆல்பத்தை அளித்தார். இந்த ஆல்பத்தில் கிராவிட்டிக்கு எதிராக ஒரு நடன அசைவை அறிமுகப்படுத்தினார். நின்ற நிலையில் 45 டிகிரியில் சாய்வதுதான் அது. இந்த நடனம் அவருக்கு பெரும் புகழை பெற்றுத்தந்தது. ரசிகர்கள் ஆல்பத்தை கொண்டாடினர். விற்பனையில் பெரும் சாதனையை பேட் ஆல்பம் பெற்றது. ஜாக்சனை பின்பற்றி பெரும் கலைஞர்கள் உருவானார்கள். பிரபு தேவாவும் அதில் ஒருவர்.
1991 ஆம் ஆண்டு டேஞ்சரஸ் ஆல்பம் வெளியானது. இதில் உள்ள பாடல்கள் குறிப்பாக பிளாக் அண்ட் ஒயிட் பாடல் இனவெறி, நிறவெறிக்கு எதிராக அடக்கு முறைக்கு எதிராக பேசியது. ஒரு பாடலில் மேடையில் வரும் கருஞ்சிறுத்தை மைக்கேல் ஜாக்சனாக மாறும். பின்னர் மைக்கேல் தனியாக 5 நிமிடத்திற்கு ஆடுவார். இது கருப்பின மக்கள் தங்கள் மகன் தங்கள் உரிமைக்காக பாடி நடனம் ஆடுவதாக எண்ணி கருப்பின மக்கள் கொண்டாடினர். ‘தே டோண்ட் ரியலி கேர் அபௌட் அஸ்’ என்கிற பாடலும் கருப்பின மக்களின் உரிமை குறித்து பேசியது.
அவர் தனது குழந்தைப்பருவத்தில் பறிபோன நினைவுகளை வைத்து படைத்த சைல்ட்வுட் பாடலும் பிரசித்தி பெற்றது. குழந்தைகளையும், மிருகங்களையும் மிகவும் நேசித்த மைக்கேல் ஜாக்சன் 2500 ஏக்கரில் பண்ணை வீட்டை அமைத்தார். அதில் பல மிருகங்கள் இருந்தன. தனது திருமண வாழ்க்கையில் சந்தோஷத்தை ஜாக்சனால் பெற இயலவில்லை. விவாகரத்து காரணமாக பெரும் தொகையை அளிக்கவேண்டி இருந்தது.மைக்கேல் ஜாக்சன் தன் நிறம் மாறும் தோல் நோய்க்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார், பின்னர் மூக்கு உடைந்ததால் அதற்கும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார், இதற்காக அவர் எடுத்த வலி நிவாரண மாத்திரைகள் அவர் உடலை பாதித்தது. பாலியல் வழக்கு, குழந்தைகளை பாலியல் ரீதியாக நடத்தியதாக போடப்பட்ட வழக்கால் பெரும் தொகையை இழந்து மன உளைச்சலுக்கு ஆளானார் ஜாக்சன்.
மைக்கேல் ஜாக்சன் மரணமும் பரபரப்பாகவே மர்மமாகவே போனது. மைக்கேல் ஜாக்சன் தான் சம்பாதித்ததில் பெரும்பகுதியை எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அளித்துள்ளார். இதற்காக இசை நிகழ்ச்சியும் நடத்தி நிதி திரட்டிக்கொடுத்துள்ளார். குழந்தைகளை, விலங்கினங்களை நேசித்த ஜாக்சனின் இறுதி நாட்கள் துயரமுடனே கழிந்தது முடிவில் அது மரணத்தில் நிறைவுற்றது.
ஜாக்சனை இன்றும் மறக்காமல் இசை கடவுளாக ரசிகர்கள் மொழி, இனம், நாடு கடந்து கொண்டாடி வருகிறார்கள். ஜாக்சனின் மறைவு பாப் இசை உலகிற்கு பேரிழப்பு. அவரது பாடல்கள் மூலம் தங்கள் ஆதர்ச நாயகனை ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருகிறார்கள். காற்றுள்ளவரை, காற்றில் கலந்துள்ள ஜாக்சனின் காந்த குரல் உள்ளவரை ஜாக்சன் என்றென்றும் நினைவுக்கூறப்படுவார்.