(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இந்தியா – மணிப்பூரில் இரு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், எதிர்கட்சி தலைவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக மணிப்பூர் மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், பிரதமரின் மௌனம் மற்றும் செயலற்ற தன்மை, மணிப்பூரை அராஜகத்திற்கு இட்டு சென்றுள்ளது. மணிப்பூரில் இந்தியா என்ற எண்ணம் தாக்கப்படும் போது இந்தியா அமைதியாக இருக்காது. நாங்கள் மணிப்பூர் மக்களுடன் நிற்கிறோம். சமாதானம் ஒன்றே முன்னோக்கி செல்லும் வழி என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு இந்திய பிரபலங்களும் கண்டனங்களை வெளியிட்டு வரும் நிலையில், பிரதமர் மோடியும் ‘மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறை மிகவும் வெட்ககேடானது’ எனக்குறிப்பிட்டு முதல் முறையாக மணிப்பூர் விவகாரம் தொடர்பில் மௌனம் கலைத்துள்ளார்.